மீண்டும் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் தோற்றுவித்துள்ளன. இலங்கையில் தங்கியிருக்கும் இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற உளவுத்தகவல் கிடைத்தததைத் தொடர்ந்தே இந்த பதற்ற நிலை நேற்றைய தினம் தோற்றம் பெற்றது.
மறு அறிவித்தல் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறும், அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாகவும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்தது.
இது தொடர்பில் பயண ஆலோசனை ஒன்றையும் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவும் பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களை கரையோரப் பகுதிகளிலிருந்து வெளியேறி கொழும்பு போன்ற பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை நேற்று விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இலங்கையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெற வாய்ப்புள்ளதன் காரணமாக, சில சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைய தகவல்களின்படி, சுற்றுலாப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு சபை குறிப்பாக இதில் உள்ள ஆபத்தின் தன்மையை குறிப்பிடவில்லை. ஆனால் இலங்கையின் பிற பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொது இடங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து அமைதியான முறையில் நாடு நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதுவும் பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்த வேளையில் இவ்வாறானதொரு அறிவிப்பு வெளியானமை மக்களை குழப்பத்தில் ஆழத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் பிரதேசத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் காஸா மீதும் பலஸ்தீன போராளிக் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மற்றும் அமைப்புகள் மீதும் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலியர்கள் மீது உலகளாவிய ரீதியில் எதிர்ப்பலை தோன்றியுள்ளது. இந்நிலையில் சில சக்திகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகைதரும் இஸ்ரேலியர்களை இலக்கு வைப்பதற்கு எத்தனிக்கலாம். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அது இலங்கையின் இயல்புநிலையை பாதிப்பதுடன் சுற்றுலாத்துறையையும் கடுமையாகப் பின்னடையச் செய்யும். இதனால் இலங்கையின் பொருளாதாரமும் கடும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
எனவேதான் அவ்வாறானதொரு அச்சுறுத்தல் இலங்கையில் ஏற்பட அனுமதிக்க முடியாது. அரசாங்கம் உடனடியாக இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இதேவேளை சுற்றுலா விசாவில் வருகை தரும் இஸ்ரேலியர்கள் இலங்கையில் தமது விசா வரையறைகளை மீறி நடந்து கொள்வதாக சில குற்றச்சாட்டுக்களும் உள்ளன. அது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தவும் வேண்டும். அவ்வாறு விதிமுறைகளை மீறுவோரை நாட்டைவிட்டு வெளியேற்றலாம். மாறாக சுற்றுலாப் பயணிகளாக வருகை தருவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இலங்கையில் அமைதியை விரும்பாத சில சக்திகள் மீண்டும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முனையக் கூடும். அதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஏற்படுத்திய வடுக்களில் இருந்து இன்னும் நாடு முழுமையாக மீளாத நிலையில் மீண்டும் அவ்வாறானதொரு சிறு அசம்பாவிதமேனும் நடக்க இடமளிக்கக் கூடாது. இதுவிடயத்தில் பாதுகாப்புத் தரப்பு மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்