பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை வேட்பாளரான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி ரிஸ்வி நகர் முதலாம் வட்டாரம் ஓடாவியார் வீதியில் அமைந்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்றத் தேர்தல் தலைமை வேட்பாளர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்தின் மீதே வியாழக்கிழமை (07) அதிகாலை குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அலுவலகத்துக்கு முன்னால் போடப்பட்டிருந்த பெரிய அளவிலான பதாதைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களும் கிழித்து வீசப்பட்ட நிலையில் இருந்துள்ளன.
இது தொடர்பாக புதிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இரவு12 மணி அளவில் அலுவலகத்தில் உள்ள கட்சியின் ஆதரவாளர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அலுவலகத்திற்கு வெளியில் மேற்படி தாக்கல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது சம்பந்தப்பட்டவர்கள் தப்பி ஓடிய விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.